தமிழ்நாட்டின் பகுதிகளில் பழங்கற்கால குடியிருப்புகள் இருந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பகுதியானது கி.மு 500,000 ஆண்டிலிருந்து கி.மு 3000 ஆண்டு வரை நீடித்திருந்ததாக மதிப்பிடப்படுகிறது. பழங்கற்காலத்தின் பெரும்பாலான காலகட்டங்களில் இப்பகுதியில், அடர்த்தியற்ற காட்டுப் பகுதிகள் அல்லது புல்வெளி சார்ந்த சுற்றுச்சூழலில் அமைந்த ஆற்றுப் பள்ளதாக்குகளுக்கு அருகிலேயே மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். இந்தப் பகுதிகளில் மக்கட்தொகை அடர்த்தி மிகக் குறைவாக இருந்தது ஆகையால் தென்னிந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே தொடக்க பழங்கற்கால கலாச்சாரம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையின் வடமேற்கு பகுதியில் உள்ள அத்திரம்பாக்கம் பள்ளதாக்கு இந்தப் பகுதிகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளைச் சுற்றி பழங்கற்காலத்திய விலங்குகளின் புதைப்படிமங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் கூறுகின்றன. இவை கி.மு 300,000 ஆண்டு காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். தென்னிந்தியாவில் வாழ்ந்த மனிதர்கள் பெரும்பாலும் பண்டைய "பழங்கற்காலத்தில்" நீண்ட காலம் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இவர்கள் கைக்கோடரி மற்றும் வெட்டுக்கத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வேட்டையாடி சேகரித்து வாழும் மக்களாக இருந்தனர்.
50,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தற்கால மனித இனத்தின் (ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ் ) மூதாதைய இனத்தினர் மிகவும் மேம்பட்ட நிலையிலும், பல்வேறு கற்களைப் பயன்படுத்தி தகடு போன்ற கருவிகள் மற்றும் மெல்லிய நுண்தகடு கருவிகளையும் உருவாக்கி பயன்படுத்தியிருந்தனர். சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நுண்கல் கருவிகள் என்று அறியப்படும் இன்னும் சிறிய கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். சூரிய காந்தக் கல், அகேட் கல், சிக்கிமுக்கி கல், குவார்ட்ஸ் கல் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி நுண்கற்கள் கருவிகளை மனிதர்கள் உருவாக்கினர். 1949 ஆம் ஆண்டில், இது போன்ற நுண்கல் கருவிகளை திருநெல்வேலி மாவட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நுண்கற்கள் காலமானது கி.மு 6000-3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும் என தொல்லியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.
0 Comments