1858 ஆம் ஆண்டு முதல் பிரத்தானிய அரசு இந்தியாவில் நேரடியாக ஆட்சி செய்வதாக கருதியது. ஆரம்ப காலங்களில் அரசாங்கம் தன்னிசையாக செயல்பட்டது. இந்தியர்களின் உணர்வுகளை முக்கியமானதாக ஆங்கிலேய அரசு கருதவில்லை. உள்ளூர் அரசாங்கத்தில் இந்தியர்கள் பங்குகொள்ள பிரித்தானியாவின் இந்திய பேரரசு அனுமதி வழங்க ஆரம்பித்தது.
உள்ளூர் அரசாங்கத்தில் இந்திய மக்களுக்கு பங்கு அளிக்கும் தீர்மானத்தை வைசிராய் ரிப்பன் 1882 ஆம் ஆண்டு இயற்றினார். 1892 ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் மற்றும் 1909 ஆம் ஆண்டின் மிண்டோ-மோர்லே சீர்திருத்தம் போன்ற சட்டமியற்றல்கள் மதராஸ் மாகாண சட்ட மேலவையை நிறுவுவதற்கு வழி செய்தது.

மகாத்மா காந்தி தலைமையில் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம், இந்திய அரசுச் சட்டம் (மோண்டாகு-செம்ல்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் என்றும் அறியப்படுகிறது) என்ற சட்டத்தை வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது. உள்ளூர் தொகுதிகளுக்கான முதல் தேர்தல் 1921 ஆம் ஆண்டு நடைபெற்றது.

கோடைக்காலத்தில் பருவமழை சரியாக பெய்யாதது மற்றும் ரியோத்வரி அமைப்பின் நிருவாகத்தில் கிடைத்த குறைவான வருமானம் ஆகியவற்றால் 1876–1877 ஆம் ஆண்டுகளில் சென்னை மாகாணத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது. அரசாங்கமும் பல தொண்டு நிறுவனங்களும் இணைந்து நகரம் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல நிவாரணப் பணிகளை மேற்கொண்டன. இந்தியாவிலிருந்த ஐரோப்பியர்களிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பஞ்ச நிவாரண நிதி பெறப்பட்டது.

பஞ்சத்தால் பாதிகப்பட்ட இடங்களில் போதுமான அளவு உதவிகளை செய்ய இயலாத ஆங்கிலேய அரசாங்கத்தை விமர்சனம் செய்து வில்லியம் டிக்பை போன்ற மனிதநேயமிக்கவர்கள் கண்டனம் செய்து எழுதினர். மூன்று முதல் ஐந்து மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகு, 1878 ஆம் ஆண்டில் பெய்த பருவமழையினால் பஞ்சம் முடிவுக்கு வந்தது.

பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவுகளின் விளைவால் பஞ்சக் குழுமம் என்ற குழுமம் 1880 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டு பேரழிவு நிவாரணக் கொள்கைகள் வகுக்கப்பட்டது. பஞ்ச நிவாரண நிதியாக 1.5 மில்லியன் ரூபாயை அரசாங்கமும் ஒதுக்கியது. எதிர்காலத்தில் இவ்வாறு பஞ்சம் ஏற்பட்டால் அதன் விளைவுகளைக் குறைப்பதற்காக வாய்க்கால் கட்டுதல், தரை மற்றும் தொடர்வண்டி பாதைகளை மேம்படுத்துதல் போன்ற குடிமையியல் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டன.