இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.
சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னனோடிகளோ வாழ்ந்து வந்தததற்கான் சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும். தொழில்நுட்பத்திலும், புதுமையிலும் ஒரு தலைசிறந்த மற்றும் நகர்ப்புற வாழ்க்கையில் தனித்தன்மை வாய்ந்த நாகரிகம் பயன்பாட்டில் இருந்த காரப்பா காலம் கிமு 2600 முதல் கிமு 1900 வரை தொடர்ந்தது. கிமு இரண்டாவது ஆயிரமாண்டு துவக்கத்தில் இது மறைய, இதன் தொடர்ச்சியாக இரும்புக்கால வேதிய நாகரிகம் சிந்து-கங்கைச் சமவெளியில் தோன்றி வளர்ந்தது. இக்காலத்தில் தான் மகாசனப்பாடங்கள் என்னும் பல அரசாட்சிமுறைகளும் தோன்றி வளர்ந்தன. கிமு 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் இது போன்ற ஒரு அரச வம்சத்தில் தான் மகதர்கள், மகாவீரர் கௌதம புத்தர் போன்றோர் தோன்றி ’’சிராமனிய’’ தத்துவத்தைப் பரப்பி வந்தனர்.

கிமு 4 ஆம் நூற்றாண்டு மற்றும் கிமு 3 ஆம் நூற்றாண்டுகளில் துணைக்கண்டத்தின் பெரும் பகுதி மவுரியப் பேரரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இக்கால கட்டத்தில் வடநாட்டில் பிரகிருதி மற்றும் பாளி மொழி இலக்கியங்களும், தெற்கில் சங்க இலக்கியங்களும் வளர்ச்சியடைந்தன. தென்னிந்தியாவில் எடுக்கப்பட்ட ஊட்டுச்சு எக்கு எனும் ஒரு வகை இரும்பு இக்காலத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அடுத்த 1500 ஆண்டுகள் இந்தியாவின் பல பகுதிகள் பல அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும், இக்காலத்தில் குப்தர் ஆண்ட காலம் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்து சமயமும், கலை, கலாச்சாரம் போன்றவையும் புத்தாக்கம் பெற்று மறுமலர்ச்சியடைந்து விளங்கியதால், இந்தியாவின் பொற்காலம் என குப்தர்களின் காலம் வர்ணிக்கப்படுகிறது.

இக்காலத்தில் இந்திய நாகரிகம், கலை, கலாச்சாரம், பண்பாடு, குறிப்பாக இந்து சமயம் மற்றும் பௌத்தம் முதலியன ஆசியா முழுவதும் பரவின. கிமு 77-ஆம் ஆண்டு வாக்கில் தென்னிந்திய அரசுகள் உரோமைப் பேரரசுடன் தொடர்பு வைத்திருந்தன. இந்திய கலாச்சாரத்தின் தாக்கமும், வீச்சமும் தென்கிழக்காசியாவின் பல இடங்களில் பரவின. இதன் காரணமாக பல இந்திய வம்சாவளி அரசுகள் இப்பகுதியில் அமைந்தன.

பாலி, இராசிட்ரகூடம், குருசார பிராதிகார பேரரசு ஆகியவற்றிடையே கன்னோசி அரசை மையப்படுத்தி நடந்த மும்முனைப் போட்டி கிபி 7-ஆம் நூற்றாண்டிற்கும் 11-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்வாகும். இப்போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது. தென்னிந்தியா அப்பொழுது, சாளுக்கியர், சோழர், பல்லவர், சேரர், பாண்டியர் மற்றும் மேலைச் சாளுக்கியர்களால் ஆளப்பட்டு வந்தது. கிபி 7-ஆம் நூற்றாண்டில் முகமதிய மதம் தோன்றி ஒரு அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தது. அதன் சுவடுகள் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப்பகுதியான இன்றைய பாக்கித்தானத்திலும் அறியப்பட்டது. சோழர்கள் தென்னிந்தியா முழுவதும் வெற்றி பெற்று கிபி 11-ஆம் நூற்றாண்டில் தெற்காசியாவில் இலங்கை, மாலத்தீவு, வங்காளம் உட்படப் பல பகுதிகளில் கால் பதித்தனர். இடைக்காலத்தின் ஆரம்பத்தில் இந்தியக் கணிதவியல், அரேபிய உலகின் வானியல் மற்றும் கணிதவியலின் மீதும் தாக்கத்தை எற்படுத்தின. அப்பொழுதுதான் இந்திய எண்களும் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

பல பேரரசுகளும் இராச்சியங்களும் இந்தப் பகுதியை ஆட்சி செய்ததின் மூலம் இந்தப் பகுதியின் பண்பாடு மேலும் வளர்ச்சி பெற்றது. கிமு 543 பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு முதல் கிமு 326 அலேக்சாண்டேர் தி கிரேட் வரையில் நீடித்தது. பாக்திரியாவைச் சார்ந்த டெமெட்ரியஸால் உருவாக்கப்பட்ட இந்தோ கிரேக்க நாடு, கந்தாரம் மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களைத் தன்னுள் கொண்டிருந்தது. கிமு 184-ஆம் ஆண்டில் நிலவிய இந்த ராஜ்ஜியம் மெனாண்டர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில் பண்பாட்டிலும், வாணிபத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைந்தது.

கிபி 77-ல் கேரளா, ரோம சாம்ராஜ்ஜியத்துடன் கடல் சார்ந்த வணிகப் பிணைப்புகள் கொண்டிருந்தது. கிபி 712-ல், அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்தத் துணைக்ககண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தெற்கு பஞ்சாப் பகுதிகளைக் கைப்பற்றினார். இதுவே மத்திய ஆசியப்பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கிபி 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 15-ஆம் நூற்றாண்டுவரை இந்தியத் துணைக் கண்டம் சந்தித்து இஸ்லாமிய ராஜ்ஜியமாகக் காரணமாக இருந்தது. இவற்றுள் கஜினி முகமது, கோரி முகமது, தில்லி சுல்தான்கள், முகலாய சாம்ராஜ்ஜியங்கள் புகழ் பெற்றவை. துணைக் கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது. முகலாயர்கள் இந்தியாவுக்குள் மத்தியக் கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர். முகலாயர்களுடன் விஜயநகரப் பேரரசு, மராத்தியப் பேரரசு, இராசபுத்திர ராஜ்ஜியங்கள் போன்ற பல இந்து ராஜ்ஜியங்களும், மேற்கு மற்றும் தென்னிந்தியப் பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம், அவுரங்கசீப்பிற்குப் பின் 18-ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள், பலோசியர்கள், சீக்கியர்கள், மராத்தியர்கள் வட மேற்குத் துணைக்கண்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன் வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.

18-ஆம் நூற்றாண்டிலிருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி, 1857-ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவைத் தனது நேரடி ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்தக் கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தின் குலைவையும் கண்டது.

20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப் பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டுத் தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்தத் துணைக் கண்டம் 1947ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது.