வரலாற்றின் இடைக்காலங்களில் தமிழ்நாடு பல்வேறு பேரரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கண்டது. இந்த பேரரசுகளில் சிலர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தங்கள் ஆதிகத்தைச் செலுத்தி மிகவும் புகழ்பெற்று இருந்துள்ளனர். சங்க காலத்தின் போது மிக தலைமையாக இருந்த சோழர்கள் முதல் சில நூற்றாண்டுகளின் போது முற்றிலும் காணப்படவில்லை.
பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே போட்டியுடன் தொடங்கிய இந்தக் காலம் சோழர்களுக்கு புத்துயிர் அளிப்பதாக இருந்தது. சோழர்கள் சிறப்பான முறையில் அதிகாரம் பெற்று ஆட்சி செய்தனர். சோழர்களின் வீழ்ச்சி பாண்டியர்களுக்கு புத்தெழுச்சியாக அமைந்தது. கோவில் கட்டுதல் மற்றும் சமய இலக்கியம் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் சிறப்பானவையாக அமைந்த காரணத்தினால் இந்த காலகட்டத்தில் இந்து மதம் மீண்டும் பலப்படுத்தப்பட்டது.

முந்தைய காலத்தில் இருந்த சமணம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கங்களை குறைத்து இந்து மதத்தின் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் ஆகியவை ஆதிக்கத்தில் இருந்தன. சோழ அரசர்கள் அதிகமாக ஆதரித்த சைவ மதம், கிட்டத்தட்ட நாட்டின் மதமாக இருந்தது. இன்று இருக்கும் பழங்காலக் கோவில்களில் சில கோவில்கள் பல்லவர்களால் இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். மாமல்லபுரத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்டுள்ள கோயில் மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கும் கம்பீரமான கைலாசநாதர் கோவில் மேலும் வைகுண்டபெருமாள் கோவில் ஆகியவை பல்லவரின் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். அதிகமான வெற்றிப்பேறு மூலம் தாங்கள் அடைந்த செல்வங்களைக் கொண்டு எப்போதும் நிலைத்திருக்கும் வகையில் அமைந்துள்ள கோவில்களில் ஒன்றான தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் வெண்கல சிற்பங்கள் சோழர்களின் கலைக்கு எடுத்துக்காட்டுகளாகும். சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களுக்கு காணிக்கையாக கிடைக்கும் பணம், நகைகள், நிலங்கள், விலங்குகள் ஆகியவற்றால் கோவில்கள் பொருளாதார மையங்களாக மாறின.

தமிழ்நாடு முழுவதும் தமிழை எழுதுவதற்கான தமிழ் வரிவடிவம் மாற்றப்பட்டு வட்டெழுத்து வரிவடிவம் பயன்படுத்தப்பட்டது. மதச்சார்பற்ற மற்றும் மதம் சார்ந்த இலக்கியம் இந்தக் காலகட்டத்தில் வளம் பெற்றது. தமிழ் காப்பியமான கம்பரின் இராமாவதாரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட ஔவையார் கம்பரின் சமகாலத்தவராவார். மதச்சார்பற்ற இலக்கியங்கள் பொதுவாக அரசர்களைப் பற்றி புகழ்ந்து பாடுவதற்காக எழுதப்படும். முந்தைய காலத்தில் எழுதப்பட்ட சமய பாடல்கள் மற்றும் சங்க காலத்தின் பழைய இலக்கியங்கள் கண்டறியப்பட்டு தொகை நூல்களாக தொகுக்கப்பட்டன. சமயம் சார்ந்த சடங்குகள் மற்றும் விழாச் சடங்குகளில் சமய ஆசான்கள் வடமொழியைப் பயன்படுத்தினர். 

இதன் மூலம் வடமொழி ஆதரிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த நம்பி ஆண்டார் நம்பி என்பவர் சைவ நூல்களை ஒன்றாக திரட்டி திருமுறைகள் என்ற பதினோரு நூல்களாக வெளியிட்டுள்ளார். இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (1133–1150 CE) வாழ்ந்த சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் என்ற நூலில் சைவம் பற்றிய தகவல்கள் வரைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன் இரண்டு முறை கலிங்க நாட்டிற்கு படையெடுத்துச் சென்றான் என்பது பற்றிய செய்திகளைக் கூறும் செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி வாழ்க்கை வரலாறு பற்றிய பழங்கால எடுத்துக்காட்டாகும்.